வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் பொதுமக்களிடம் சிக்கினார்; தூணில் கட்டி வைத்ததால் பரபரப்பு
ஓட்டப்பிடாரம் அருகே வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் பொதுமக்களிடம் சிக்கினார். அவரை தூணில் கட்டி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் பொதுமக்களிடம் சிக்கினார். அவரை தூணில் கட்டி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டில் புகுந்த வாலிபர்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எப்போதும்வென்றான் கிழக்குத்தெருைவ சேர்ந்தவர் கருப்பழகு மகன் மாடசாமி (வயது 36). இவர் நேற்று அதிகாலையில் தனது வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டில் யாேரா பாத்திரங்களை உருட்டுவது போன்று சத்தம் கேட்டது. இதனால் மாடசாமி எழுந்து சத்தம் போடவே, வாலிபர் ஒருவர் அங்கிருந்து ஓடினார்.
பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர்
அதற்குள் அக்கம்பக்கத்தினரும் அங்கு வந்து வாலிபரை விரட்டி சென்றனர். உடனே அந்த வாலிபர் அருகில் உள்ள மற்றொரு வீட்டின் மாடியில் ஏறி ஒளிந்து கொண்டார். பொதுமக்களும் மாடியில் ஏறி அவரை பிடிக்க முயன்றனர்.
அதற்குள் அவர் மாடியில் இருந்து கீழே குதித்து தப்பி ஓட முயன்றார். ஆனால், பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
போலீசார் விரைந்தனர்
அப்போதுதான் அந்த வாலிபர் அதே கிராமத்தை சேர்ந்த தேன்ராஜ் மகன் கனகராஜ் (வயது 26) என்பது தெரியவந்தது. அவரை அங்குள்ள தூணில் கட்டி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து எப்போதும்வென்றான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் முருகன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று தூணில் கட்டி வைத்திருந்த கனகராஜை மீட்டனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
அவர் மாடியில் இருந்து குதித்தபோது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போலீஸ் விசாரணையில், கனகராஜ் வீடு புகுந்து திருட முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் எப்போதும்வென்றான் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.