செல்போன் திருட முயன்ற வாலிபர் கைது
செல்போன் திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திலீப் குமார் (வயது 18). இவர் திருக்காம்புலியூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிளில் 4 மர்மநபர்கள் வந்தனர். அப்போது, திலீப்குமாரின் பாக்கெட்டில் இருந்த செல்போனை ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் திருட முயன்றார். இதனால் சுதாரித்து கொண்ட திலீப்குமார் அந்த நபரை மோட்டார் சைக்கிளுடன் பிடித்து கொண்டு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.
இதைக்கண்ட மற்ற 3 பேரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் அந்த மர்மநபரை பிடித்து, கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அந்தநபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்போனை பறிக்க முயன்றது ராயனூர் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணராஜ் (20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய மற்ற 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.