அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றுக்குள் தற்காலிக சாலை அமைத்து தர வேண்டும்


அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றுக்குள் தற்காலிக சாலை அமைத்து தர வேண்டும்
x

அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றுக்குள் தற்காலிக சாலை அமைத்து தர வேண்டும்

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றுக்குள் தற்காலிக சாலை அமைத்து தர வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாலை சரிந்து விழுந்தது

அய்யம்பேட்டை மதகடி பஜார் வணிகர் சங்க தலைவர் ஏ.என்.ஜெயராமன், செயலாளர் ஏ.எம்.முகமது பசீர், பொருளாளர் ஏ.சேக் அலாவுதீன் மற்றும் நிர்வாகிகள் தஞ்சை கலெக்டருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

அய்யம்பேட்டை -கணபதி அக்ரகாரம் சாலையில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் கட்டுமான பணிகள் 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த நிலையில் புதிய பாலத்தின் கட்டுமான பணிகளின் போது பழைய பாலத்தின் வடபுற சாலை சரிந்து விழுந்தது.

இதனால் அய்யம்பேட்டை -கணபதி அக்ரகாரம் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அய்யம்பேட்டைக்கு வடபுறம் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் தேவைகளுக்கும், அவசர கால மருத்துவ உதவிகளுக்கும் அய்யம்பேட்டைக்கு வரவேண்டிய நிலையில் உள்ளனர்.

மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்களும், நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளும் இந்த சாலையை பயன்படுத்தி தான் அய்யம்பேட்டைக்கு வந்து கல்வி பயின்று செல்கின்றனர்.

தற்காலிக சாலை அமைத்து தரவேண்டும்

இந்தநிலையில் சரிந்து விழுந்த சாலைக்கு அருகில் புதிய பால கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் சரிந்து விழுந்த சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கிராம மக்கள் அய்யம்பேட்டைக்கு வந்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அய்யம்பேட்டை பகுதி கடைகளில் வியாபாரம் குறைந்து வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றுக்குள் தற்காலிக சாலை அமைத்து தர வேண்டும். புதிய பாலம் கட்டுமான பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story