பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து; 5 பேர் உடல் சிதறி பலி
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 5 பேர் உடல் சிதறி பலியானார்கள். 13 பேர் படுகாயம் அடைந்தனர். 4 அறைகள் தரைமட்டமாகின.
மதுரை,
மதுரை மாவட்டம் அழகுசிறை கிராமத்தில் அனுசுயாதேவி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
இந்த ஆலையில் தனித்தனியாக உள்ள சுமார் 20 கட்டிடங்களில் பட்டாசு உற்பத்தி நடந்து வந்தது. 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். இவர்கள் அனைவரும் அக்கம்பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்கள்.
நேற்று அங்கு வழக்கம்போல் பணி நடந்தது. மதியம் 1 மணி அளவில் தொழிலாளர்களில் சிலர் மதிய உணவுக்காக தங்கள் ஊர்களுக்கு சென்றிருந்தனர். மற்ற தொழிலாளர்களில் சிலர், தாங்கள் கொண்டு வந்த உணவை, ஆலையின் ஒரு பகுதியில் அமர்ந்து சாப்பிட தொடங்கினர். சுமார் 20 பேர் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருந்தனர்.
பயங்கர வெடிவிபத்து
மதியம் 1.15 மணி அளவில், சரவெடிகளுக்கான ரசாயன மருந்து கலக்கும் அறையில், உராய்வு ஏற்பட்டு திடீரென்று பயங்கரமாக வெடித்து சிதறியது.
உடனே அறையில் இருந்த மற்ற பட்டாசுகளும் மொத்தமாக வெடித்ததால் அருகருகே இருந்த 4 கட்டிடங்கள் கண் இமைக்கும் நேரத்தில் வெடித்து தரைமட்டமாகின. அந்த இடமே புகை மண்டலமாக மாறியது.
சாப்பிட்டு கொண்டிருந்த தொழிலாளர்கள், உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். வெடித்து சிதறிய 4 அறைகளில் பணியாற்றி வந்த 10-க்கும் மேற்பட்டோர் உயிருக்கு போராடினர். இதுகுறித்து திருமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
5 பேர் உடல்சிதறி பலி
வெடிவிபத்து சத்தம் சுற்றுவட்டார கிராமங்கள் வரை கேட்டதால், அந்த கிராமத்தினரும் என்னவோ ஏதோவென்று பதறியபடி அங்கு ஓடிவந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். திருமங்கலம் மட்டுமின்றி டி.கல்லுப்பட்டி, சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய இடங்களில் இருந்தும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மொத்தம் 5 பேர் உடல் சிதறி பலியானது தெரியவந்தது.
13 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் கவலைக்கிடமான நிலையில் இருந்த 7 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர்.
அடையாளம் தெரிந்தது
பலியானவர்களின் உடல்களை அடையாளம் காண சிந்துபட்டி போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது வெடிவிபத்தில் பலியானது அழகுசிறை கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமி மனைவி கொண்டம்மாள் (வயது58), வடக்கம்பட்டியை சேர்ந்த சகாதேவன் மகன் வல்லரசு(20), குபேந்திரன் மகன் கோபி(22), கனகரத்திரனம் மகன் விக்னேஷ் (25), கலுங்குப்பட்டியை சேர்ந்த அம்மாசி(45) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதில் கோபிக்கு சமீபத்தில்தான் திருமணமாகி அவருடைய மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் அங்கு திரண்டு கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அமைச்சர் மூர்த்தி
சம்பவம் நடந்த பட்டாசு ஆலைக்கு அமைச்சர் மூர்த்தி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், டி.ஐ.ஜி. பொன்னி, போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் மற்றும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
வெடிவிபத்தை தொடர்ந்து பட்டாசு ஆலை நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
18 பேர் பலியான சம்பவம்
கடந்த 2009-ம் ஆண்டு வடக்கம்பட்டி கிராமத்தில் இதே நிறுவனத்துக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு அதில் 18 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடந்த வெடிவிபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.