தேவாரத்தில், பண்ணையில் பயங்கர தீ விபத்து:4 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகின
தேவாரத்தில் பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகின.
தேவாரம் மூனாண்டிபட்டியை சேர்ந்தவர் ராஜாங்கம். இவர் அந்த பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிகளை வளர்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக 4 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதற்காக கொண்டு வந்தார். இந்த நிலையில் நேற்று காலை கோழிப்பண்ணையில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதைக்கண்ட ராஜாங்கம் தீயை அணைக்க முயன்றார். ஆனால் அவரால் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து அவர் உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் பண்ணை முழுவதும் எரிந்ததில் அங்கு இருந்த 4 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகின.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் கூறினர். இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தால் 4 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.