நகராட்சி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து


நகராட்சி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
x

குடியாத்தம் நகராட்சி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாயின.

வேலூர்

குடியாத்தம் நகராட்சி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாயின.

தீ விபத்து

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலக வளாகத்தில் சுமார் 45 ஆண்டுகள் பழமை வாய்ந்த சேர்மன் எம்.ஜி.அமிர்தலிங்கம் முதலியார் மன்றக்கூட கட்டிடம் உள்ளது. முன்பு இந்த கட்டிடத்தில் நகர மன்ற கூட்டங்கள் நடைபெற்று வந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி வளாகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டதால் இந்த பழைய கட்டிடத்தில் கூட்டங்கள் நடைபெறுவது இல்லை.

இந்த பழைய கட்டிடத்தில் குடியாத்தம் நகராட்சி சுகாதார பணிகளுக்கு தேவையான கருவிகள், பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து, பினாயில், கிரிமிநாசினி மற்றும் கொரோனா காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் வைக்கப்படுள்ளது.

இந்தநிலையில் அதிகாலை சுமார் 2 மணி அளவில் அந்த பழைய கட்டிடம் தீ பிடித்து எரிந்துள்ளது. இதை அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் பார்த்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் நகராட்சி அலுவலர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இரண்டு வாகனங்கள்

உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பழனி தலைமையில் குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில் தாமஸ் சுகாதார அலுவலர் மொய்தீன், துப்புரவு பணி மேற்பார்வையாளர் பிரபுதாஸ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் விரைந்து வந்து தீயணைப்பு பணிகளை பார்வையிட்டனர்.

குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, கே.வி. குப்பம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட போலீசார் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொருட்கள் எரிந்து நாசம்

தீ விபத்து ஏற்பட்ட நகராட்சி பழைய கட்டிடத்தின் சில மீட்டர் தொலைவில் பெட்ரோல் பங்க்குகளும், பின்பகுதியில் அரசு மருத்துவமனையும் இருப்பதால் தீ மேலும் பரவாமல் இருக்க பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரம் போராடி முற்றிலும் தீயணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாயின. சேதமதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது.

குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன், தாசில்தார் எஸ்.விஜயகுமார் ஆகியோர் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தை பார்வையிட்டு கேட்டு அறிந்தனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையினரும் குடியாத்தம் டவுன் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story