தூத்துக்குடி அருகே முன்விரோதத்தில் ஜவுளி வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அருகே முன்விரோதத்தில் ஜவுளி வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி அருகே முன்விரோதத்தில் ஜவுளி வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ஜவுளி வியாபாரி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் காமராஜ் நகரை சேர்ந்த லட்சுமணன் மகன் அழகர் (வயது 38). ரெடிமேடு ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஜெயம் மகன் முருகேசன் (43). இவர் கோவையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவருக்கு அழகர், காய்கறியை இங்கிருந்து அனுப்பி வந்தார்.
இந்நிலையில் அழகர், முருகேசனின் உறவினர் ஜேம்ஸ் என்பவருக்கும் காய்கறி அனுப்பினார். இதனால் முருகேசனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் காய்கறி கடையை காலி செய்து விட்டு புதியம்புத்தூர் வந்தார். பின்னர் அவர் இங்குள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
தகராறு
கடந்த 17-ந் தேதி புதியம்புத்தூரில் உள்ள திருமண மண்டபத்துக்கு முருகேசன் சென்றார். அங்கு அழகரிடம், ஜேம்ஸ்க்கு எதற்காக காய்கறி அனுப்புகிறாய் எனக்கேட்டு தகராறு செய்தார். மேலும் அவ்வப்போது அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
கடந்த 24-ந் தேதி இரவு அழகர் தனது நண்பர்களுடன் புதியம்புத்தூர் பஜார் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
விறகு கட்டையால் தாக்குதல்
அப்போது அங்கு கையில் விறகு கட்டையுடன் வந்த முருகேசன் திடீரென அழகரின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அக்கம்பக்கத்தினர் சத்தம் போடவும் அங்கிருந்து முருகேசன் தப்பி ஓடி விட்டார்.
பின்னர் அழகரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சாவு
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அழகர் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை குறித்து புதியம்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை பிடித்து கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.