மாட்டை கடித்து கொன்ற புலி
பேச்சிப்பாறை அருகே அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் புலி மாட்டை கடித்துக் கொன்றதோடு, நாயையும் கவ்வி சென்றதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
குலசேகரம்,
பேச்சிப்பாறை அருகே அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் புலி மாட்டை கடித்துக் கொன்றதோடு, நாயையும் கவ்வி சென்றதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
புலி அட்டகாசம்
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் உள்ள சிற்றாறில் அரசு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு மற்றும் மூக்கறைக்கல் பழங்குடியின குடியிருப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக புலி தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
அந்த புலி, 2 ஆடுகளை கொன்றும், ஒரு மாட்டை கடித்துக் குதறியும் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் வழக்கம்போல் வெளியே நடமாடுவதை தவிர்த்து வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். சுமார் 3 கி.மீட்டருக்குள் புலி சுற்றி, சுற்றி வந்து குடியிருப்புக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்தநிலையில் அந்த புலி ஒரு பசுமாட்டையும், நாயை அடித்துக் கொன்றதாக பரவிய சம்பவம் அங்குள்ள மக்கள், தொழிலாளர்களை மீண்டும் அதிர வைத்துள்ளது.
மாட்டை கடித்து கொன்றது
அதாவது நேற்றுமுன்தினம் சிற்றாறு குடிருப்பைச் சேர்ந்த பத்மநாபன் என்ற தொழிலாளி தனது பசுமாட்டை அங்குள்ள மேய்ச்சல் நிலத்திற்கு அனுப்பியுள்ளார். ஆனால் மேய்ச்சல் முடிந்து விட்டு மாலையில் திரும்ப வேண்டிய மாடு வரவில்லை.
இதையடுத்து பத்மநாபன் பசுமாட்டை பல இடங்களில் தேடியும், அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் நேற்று காலையில் அந்த பசுமாடு மைலாறு என்ற இடத்தில் புலி கடித்து கொன்று போட்டிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது.
உடனே பத்மநாபன் மற்றும் பொதுமக்கள் அந்த பகுதிக்கு ஓடி சென்று பார்த்தனர். அங்கு மாட்டின் ஒருபுறம் கடித்து குதறியபடி இருந்தது. இதனால் புலி பாதி இறைச்சியை மட்டும் சாப்பிட்டு விட்டு மீதியை அங்கேயே போட்டு சென்றது தெரியவந்தது.
நாயையும் கவ்வி சென்றது
இதேபோல் சிற்றாறு ரப்பர் கழக மருந்தகம் அருகில் வசிக்கும் மருந்தக நர்சு ஜோதீஸ்வரின் வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த வளர்ப்பு நாயையும் நள்ளிரவில் புலி கவ்வி சென்ற தகவலும் வெளியாகி மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் வனத்துறையினரும் அங்கு கேமராக்களை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் புலி நடமாடும் பகுதிகளை திருநெல்வேலி மண்டல வன பாதுகாவலர் மாரிமுத்து மற்றும் குமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் கால்நடைகளை பறிகொடுத்தவர்களையும் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர்.
கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
இதற்கிடையே கடையல் பேரூராட்சி தலைவர் ஜூலியட் சேகர், மாவட்ட கலெக்டருக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் கழக தொழிலாளர்களும், காணி பழங்குடி மக்களும் சுமார் 55 சதவீதம் பேர் வரை கடையல் பேரூராட்சி பகுதியில் தான் வசிக்கின்றனர். தற்போது இங்குள்ள ஆடு, மாடு, நாயை புலி கொன்றுள்ளதால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
எனவே மக்களின் பாதுகாப்பு கருதி களியல் வனச்சரக பகுதியின் மையத்தில் வாகன வசதியுடன் கூடிய மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸ் வசதி செய்வதுடன் பாதுகாப்புக்காக கூடுதல் வன ஊழியர்களையும் நியமிக்க வேண்டும். மேலும் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.