தியாகராஜர் கோவில் கீழவாசல் பகுதியில் கழிவறை கட்டக்கூடாது
தியாகராஜர் கோவில் கீழவாசல் பகுதியில் கழிவறை கட்டக்கூடாது கலெக்டரிடம் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை
பா.ஜ.க., தே.மு.தி.க., சிவனடியார்கள் பொதுக்கூட்டம், இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்பு சார்பில் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் விக்னேஷ், நகரத்தலைவர் செந்தில், நகர துணைத்தலைவர் நீலகண்டன் மற்றும் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கோட்டூர்.ராகவன், நகர தலைவர் கணேசன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் கழுகு சங்கர், தே.மு.தி.க. நகர செயலாளர் சதீஷ் ஆகியோர் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் தியாகராஜ சாமி கோவிலின் கிழக்கு கோபுரத்தின் அடியில் நகராட்சி நிர்வாகம் கழிவறைக்கட்ட முயற்சித்தது. 2 மாதங்களுக்கு முன்பு இடத்தை தேர்வு செய்யும் முன்பே இந்த இடத்தில் பக்தர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனென்றால் இந்த இடத்தின் அருகில் தான் ஆழி தேருக்கு தியாகராஜர் சாமி செல்லும் போது சாமிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்படும்.இதுமட்டுமின்றி திருவாதிரை திருவிழா, தேர்திருவிழா மற்றும் திருகார்த்திகை சொக்கப்பானை கொழுத்தும் விழா உள்ளிட்ட விழாக்கள் நடக்கும் முன் இந்த இடத்தில் வைத்துதான் பூஜை செய்த பின்னர் விழா நடத்தப்பட்டது. கொடியேற்றம் மற்றும் கொடி இறக்கம் பூஜைகளும் இதே இடத்தில் வைத்து தான் நிகழ்த்தப்படும். இந்த ராஜகோபுர வாசல் வழியாக இந்திரன் வந்து பூஜித்தார். எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த வீதியில் விழுந்து வணங்கி உள்ளே செல்வார்கள். இவ்வாறு புகழ்பெற்ற இடத்தில் கழிவறை கட்டுவது இந்து மத தெய்வங்களை இழிவுப்படுத்தும் வகையிலும், பக்தர்களின் மனதை புன்படுத்துவது போல் உள்ளது.எனவே பக்தர்கள், பொதுமக்கள் கருத்துகளை ஏற்று கழிவறை கட்டும் முடிவை கைவிட வேண்டும். கழிவறை கட்ட வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.