உண்ணாவிரத போராட்டத்தில் சுங்கச்சாவடி பணியாளர் மயங்கியதால் பரபரப்பு
உண்ணாவிரத போராட்டத்தில் சுங்கச்சாவடி பணியாளர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை சுங்கச்சாவடி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, செங்குறிச்சி சுங்கச்சாவடி ஆகியவற்றில் தலா 28 பணியாளர்களை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்து, அந்த பணியாளர்களும், சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களும் கடந்த 1-ந்தேதி முதல் திருமாந்துறை சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 4-வது நாளான நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுங்கச்சாவடி பணியாளர்களை தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். 3 நாட்களாக மேற்கண்ட 2 சுங்கச்சாவடிகளிலும் பணியாளர்களின் போராட்டத்தினால் வாகனங்கள் கட்டணமின்றி சென்று வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் பாஸ்ட் டேக் சேவை செயல்பட தொடங்கியதால் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மதியம் முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரத போராட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்ட சுங்கச்சாவடி பணியாளரான கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்த மாயவேல் (வயது 38) என்பவர் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுங்கச்சாவடி பணியாளர்கள் ஒப்பந்த தனியார் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உண்ணாவிரத போராட்டம் இரவும் நீடித்தது.