திட்டக்குடி அருகே தீப்பந்தம் ஏந்தி கிராம மக்கள் போராட்டம் தெருமின்விளக்கு அமைக்கக்கோரி நடந்தது
திட்டக்குடி அருகே தெருமின்விளக்கு அமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி,
திட்டக்குடி அடுத்த மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டூர் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாரியம்மன் கோவில் தெரு, காலனி பகுதியில் தெரு மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் மின்விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு கையில் தீப்பந்தம் ஏந்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் தெருமின்விளக்குகள் அமைக்கப்படாததால், இரவில் வீட்டை விட்டு, வெளியே வர முடியாமல் முடங்கி கிடக்கும் நிலை எங்களுக்கு ஏற்படுகிறது. எங்கள் வீடுகளில் மர்ம நபர்கள் கற்களை வீசுகின்றனர். இருளை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பங்கள் அதிகமாக நடக்கிறது. எனவே தெருமின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றனர். இதையடுத்து போலீசார், இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து தெருமின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.