ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வை 1,729 பேர் எழுதினர்
வேலூர் மாவட்டத்தில் நடந்த ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வை 1,729 பேர் எழுதினார்கள்.
வேலூர் மாவட்டத்தில் நடந்த ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வை 1,729 பேர் எழுதினார்கள். தேர்வு மையங்களை வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆய்வு செய்தார்.
பொறியியல் பணிக்கான தேர்வு
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 3,103 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்கள் தேர்வு எழுத வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, வேலூர் தந்தை பெரியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, ஊரீசு பள்ளி, அலமேலுமங்காபுரம் சினேகதீபம் பள்ளி உள்பட 11 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தேர்வின் முதல்தாள் காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணிவரை நடந்தது. காலை 8 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர், கைக்கெடிகாரம் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
1,729 பேர் தேர்வு எழுதினர்
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வின் முதல்தாளை 1,729 பேர் எழுதினார்கள். 1,374 பேர் எழுதவில்லை. 2-ம் தாள் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. இந்த தேர்வை 1,718 பேர் எழுதினர். 1,385 பேர் பங்கேற்கவில்லை.
வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு மையங்களில் நடந்த தேர்வை வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆய்வு செய்தார்.
அனைத்து தேர்வு மையங்களிலும் செல்போன் ஜாமர்கருவி பொருத்தப்பட்டிருந்தது. மேலும் தேர்வு மையங்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.