குப்பை கிடங்காக மாறிய சுற்றுலா பஸ்நிலையம்
பழனியில் சுற்றுலா பஸ்நிலையம் குப்பை கிடங்காக மாறி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஏராளமானோர் வருகின்றனர். இதில் கார், பஸ், வேன் போன்றவற்றில் வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக இடும்பன்மலை அருகே கிழக்கு கிரிவீதியில் சுற்றுலா பஸ்நிலையம் உள்ளது. இங்கு கட்டணமும் ஏதுமின்றி வாகனங்களை பக்தர்கள் நிறுத்தி செல்கின்றனர்.
மேலும் இங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் அமர்ந்து உணவு சாப்பிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். குறிப்பாக விசேஷம், வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பஸ்நிலையமே வாகனங்களால் நிரம்பி காணப்படும். அதேபோல் இரவு நேரங்களில் சுற்றுலா பஸ்நிலைய பகுதியில் உள்ளூர் மக்களும் நடைபயிற்சி செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா பஸ்நிலையம் தற்போது குப்பை கிடங்காக மாறி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் வீசி செல்லும் பாக்கு மட்டை தட்டுகள் மட்டுமின்றி தண்ணீர் பாட்டில்கள், பாலித்தீன் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மழைக்காலங்களில் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மினி குப்பை கிடங்காக மாறி வரும் சுற்றுலா பஸ்நிலையத்தில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.