வேடசந்தூர் அருகே சாலையில் கவிழ்ந்த சுற்றுலா வேன்


வேடசந்தூர் அருகே சாலையில் கவிழ்ந்த சுற்றுலா வேன்
x

வேடசந்தூர் அருகே சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 31). இவர் சுற்றுலா வேனை புதுப்பித்து தகுதிச்சான்று பெறுவதற்காக வேடசந்தூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்திற்கு இன்று காலை சென்றார். அங்கு வேனை காண்பித்து விட்டு மீண்டும் தனது ஊருக்கு வேனில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

வேடசந்தூர்-கூம்பூர் சாலையில் வெரியம்பட்டியை அடுத்துள்ள சாலை வளைவில் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது. இதனால் மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதற்காக சாலையின் ஓரமாக வேனை சரவணக்குமார் திருப்பினார். அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் அந்த வேன் சாலையின் நடுவே கவிழ்ந்தது.

வேனில் பயணிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதேபோல் வேன் கவிழ்ந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் எதுவும் வராததால் தப்பின. இந்த விபத்தில் வேன் டிரைவர் சரவணக்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

மேலும் இந்த விபத்தால் வேடசந்தூர்-கூம்பூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மீட்பு வாகனம் மூலம் வேன் அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பிறகு அந்த சாலையில் போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story