அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி சுற்றுலா பயணி படுகாயம்
பைக்காரா அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த போது, அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் சுற்றுலா பயணி படுகாயம் அடைந்தார்.
கூடலூர்,
பைக்காரா அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த போது, அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் சுற்றுலா பயணி படுகாயம் அடைந்தார்.
மோட்டார் சைக்கிளில் சுற்றுலா
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடக்கரா பகுதியை சேர்ந்தவர் ஷபிஷ்பவன். இவரது மனைவி அபியா (வயது 20). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் ஊட்டி மற்றும் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு நேற்று காலை 11 மணிக்கு தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை ஷபிஷ்பவன் ஓட்டினார். பின்னால் அபியா அமர்ந்திருந்தார். இதனிடையே நீலகிரியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை மற்றும் மோசமான காலநிலை நிலவுவதால் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. இந்தநிலையில் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சூட்டிங்மட்டம் பகுதியில் சென்ற போது,மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
படுகாயம்
தொடர்ந்து மோட்டார் சைக்கிளுடன் ஷபிஷ்பவன், அபியா 2 பேரும் தவறி கீழே விழுந்தனர். இந்த சமயத்தில் கூடலூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ் அந்த வழியாக வந்தது. அப்போது விழுந்த வேகத்தில் அபியா பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினார். இதில் அவரது இடது கையில் படுகாயம் ஏற்பட்டது. தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் பைக்காரா போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த அபியாவை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து பைக்காரா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.