ரெயிலில் அடிபட்டு வியாபாரிஉள்பட 2 பேர் பலி
கோவில்பட்டி அருகே ரெயிலில் அடிபட்டு வியாபாரி உள்பட 2 பேர் பலியாகினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு வியாபாரி உள்பட 2 பேர் பலியாகினர்.
வியாபாரி
கோவில்பட்டி அடுத்துள்ள சாலைப்புதூர் பெத்தேல் ஹோம் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பிணம் தண்டவாளத்தில் கிடப்பதாக தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தர்மபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி விாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் எட்டயபுரம் அருகே உள்ள எம். கோட்டூர் அந்தோணி ராஜா மகன் டென்சில் ராஜா (வயது 25) என்பது தெரியவந்தது. வியாபாரியான இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவர் தண்டவாளத்தைக் கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு பலியானாரா? அல்லது கடன் பிரச்சினை காரணமாக ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது உடலை போலீசார் கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கட்டிட தொழிலாளி
இதே போல கடம்பூர் அருகே உள்ள சுந்தரேஸ்வரபுரம் ரெயில்வே தண்டவாளப் பகுதியில் ஆண் பிணம் கிடப்பதாக தூத்துக்குடி ரெயில்போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், அவர் சுந்தரேஸ்வரபுரம் மேற்கு தெருவை சேர்ந்த சங்கர நாராயணன் மகன் ராமகிருஷ்ணன் ( 40) என்பதும், கட்டிட தொழிலாளியான இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவருடைய அண்ணன் மாரியப்பன் கண்காணிப்பில் இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மனைவி முத்துமாரி (வயது 35), மகள்கள் அன்னலட்சுமி (வயது 10), சிவசக்தி (வயது 8) ஆகியோர் வானரமுட்டியில் தனியாக வசித்து வருகின்றனராம்.