கள்ளக்காதலை கண்டித்த வியாபாரி அடித்துக் கொலை; மனைவியிடம் போலீசார் விசாரணை
ஆலங்குளம் அருகே, கள்ளக்காதலை கண்டித்த பழைய இரும்பு வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே, கள்ளக்காதலை கண்டித்த பழைய இரும்பு வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
இரும்பு வியாபாரி
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த வட்டாலூர் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவருடைய மகன் முத்துராமலிங்க ராஜன் (வயது 45). பழைய இரும்பு வியாபாரி. இவருடைய மனைவி உஷா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் உஷா கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனது தாய் வசிக்கும் ஏ.பி.நாடானூரில் உள்ள வீட்டில் உஷா இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு முத்துராமலிங்க ராஜன் வீட்டில் இருந்த தனது தாயாரிடம் வெளியூர் செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
அடித்துக்கொலை
இந்த நிலையில் நேற்று காலை முத்துராமலிங்க ராஜன் பூலாங்குளம் அருகே காட்டுப்பகுதியில் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடைய கை, கால்கள் முறிந்த நிலையில் இருந்தன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
கள்ளக்காதல்
விசாரணையில், வட்டாலூரை சேர்ந்த கடல்மணி என்பவருக்கும், முத்துராமலிங்க ராஜனின் மனைவி உஷாவிற்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அறிந்த முத்துராலிங்க ராஜன் தனது மனைவியை கண்டித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்து உள்ளது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உஷாவை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடல்மணியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மனைவியின் கள்ளக்காதலை கண்டித்த நிலையில் பழைய இரும்பு வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.