சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் திருவனந்தபுரத்திற்கு பயணம்


சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் திருவனந்தபுரத்திற்கு பயணம்
x

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் இருமாநில போலீசாரின் துப்பாக்கி ஏந்திய மரியாதையுடன் புறப்பட்டது.

கன்னியாகுமரி

சுசீந்திரம்:

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் இருமாநில போலீசாரின் துப்பாக்கி ஏந்திய மரியாதையுடன் புறப்பட்டது.

நவராத்திரி விழா

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. 1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மகா ராஜா காலத்தில் இந்த விழா திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

அதன் பின்பு இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் யானை, வெள்ளி குதிரை வாகனம் மற்றும் பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். பின்னர் அங்கு நவராத்திரி விழா பூஜைகளில் பங்கேற்ற பின்பு சாமி சிலைகள் மீண்டும் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருவது மரபு.

முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு

அதுபோல் இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதனால் தினமும் நடைபெறும் நித்திய காரிய பூஜைகள் முடிந்த பிறகு பல்லக்கு வாகனத்தில் அம்மன் காலை 8.25 மணிக்கு எழுந்தருளினார். இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இருமாநில போலீசார் மரியாதை

அப்போது தமிழக-கேரள போலீசார் அணிவகுத்து நின்று துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். பிறகு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மனுக்கு கோவில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. ெதாடர்ந்து 4 ரத வீதிகளிலும் அம்மன் ஊர்வலம் நடந்தது.

அப்போது பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு திருவிளக்கேற்றி திருக்கனம் சாத்தி அம்மனுக்கு மலர்தூவி வழி அனுப்பினர். ஊர்வலத்தின் பின்னால் தமிழக மற்றும் கேரளா அரசு சார்பில் தீயணைப்பு வாகனங்களும், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும், போலீஸ் வாகனங்களும் அணிவகுத்தபடி சென்றன. அம்மன் ஊர்வலம் ஆசிரமம், கோட்டார், பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக மாலை 6.35 மணிக்கு பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலை சென்றடைந்தது.

எம்.எல்.ஏ.க்கள்

முன்னதாக புறப்பாடு நிகழ்ச்சியில் கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம், நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், கல்குளம் தாசில்தார் வினோத், பா.ஜனதா மாவட்ட பொருளாளர் முத்துராமன், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, சுசீந்திரம் பேரூராட்சி தலைவி அனுசுயா, ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், நவராத்திரி பவனி விழாக்குழு தலைவர் வீரபத்திரப்பிள்ளை,

கோவில் கண்காணிப்பாளர் ஆனந்த், முன்னாள் கண்காணிப்பாளர் சோணாச்சலம், தேவசம் பொறியாளர்கள் ராஜ்குமார், அய்யப்பன், தேவசம் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், திருக்கோவில் அலுவலக கணக்கர் குற்றாலம், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், கோவில் ஸ்ரீ காரியம் ஹரி பத்மநாபன், முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேஷ், விருந்தோம்பல் பிரிவு தலைவர் ரவீந்திரன், ஊர் தலைவர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தலைமையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கேரள அறநிலையத்துறை மந்திரி ராதாகிருஷ்ணன், தொல்லியல் துறை மந்திரி அகமது தேவர், மத்திய மந்திரி முரளீதரன், கோவில், கல்வித்துறை மந்திரி சிவன் குட்டி, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

பின்னர் 3 சாமி சிலைகளும் அங்கிருந்து ஊர்வலமாக சென்று வருகிற 25-ந் தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது.


Next Story