பயிர் காப்பீடு திட்டம் குறித்து முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும்
பயிர் காப்பீடு திட்டம் குறித்து மாவட்ட அளவில் முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் பேசினர்.
பயிர் காப்பீடு திட்டம் குறித்து மாவட்ட அளவில் முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் பேசினர்.
விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் வரவேற்றார்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்து பேசினர். அப்போது அவர்கள் பேசியதாவது:-
பயிர் காப்பீடு திட்டம் குறித்து மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும். பிரதம மந்திரி கிஷான் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிதிப்பயன் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தாட்கோ திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கடனுதவிகள் முறையாக வழங்கப்படுவதில்லை. மேலும் தாட்கோ மூலம் இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். மேல்வணக்கம்பாடி பால் கொள்முதல் நிலையத்தில் பால் பகுப்பாய்வு கருவி வழங்க வேண்டும்.
பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் முடிக்கப்படாமல் இருக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
குப்பநத்தம் அணை
குப்பநத்தம் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு ஒரு மாதமாகியும் கடைகோடியில் உள்ள ஏரிக்கு தண்ணீர் வர வில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து கடைசியாக உள்ள ராதாபுரம் ஏரி வரை தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். ஜவ்வாது மலை அடிவாரத்தில் ரப்பர் மரம் வளர்ப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றதா என்று அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து விற்பனையை தடுக்க வேண்டும்.
தனியார் சர்க்கரை ஆலைகளில் உள்ள நிலுவைத் தொகையை மாவட்ட நிர்வாகம் பெற்று தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
பின்னர் விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.
இதையடுத்து விவசாய சங்க பிரதிநிதிகளின் மூலம் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் தனிநபர் தொடர்பான மனுக்கள் மீதும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமாபதி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சோமசுந்தரம் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உள்ப பலர் கலந்து கொண்டனர்.