நடுக்கடலில் அதிகாரிகள்-மீனவர்கள் இடையே தள்ளு முள்ளு


நடுக்கடலில் அதிகாரிகள்-மீனவர்கள் இடையே தள்ளு முள்ளு
x

கோடியக்கரையில், வெளிமாவட்டத்தினர் மீன்பிடிப்பதாக புகார் வந்ததால் நடுக்கடலில் அதிகாரிகளுக்கும், மீனவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

கோடியக்கரையில், வெளிமாவட்டத்தினர் மீன்பிடிப்பதாக புகார் வந்ததால் நடுக்கடலில் அதிகாரிகளுக்கும், மீனவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மீன்பிடிக்க எதிர்ப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடிசீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன் பிடிப்பது வழக்கம்.

கடந்த ஆண்டு முதல் வேதாரண்யம் பகுதியில் உள்ள சில மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், வெளிமாவட்ட மீனவர்கள் கோடியக்கரையில் தங்கி மீன் பிடிப்பதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

இதனைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர், மீன்வளத்துறையினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், கோடியக்கரையில் இந்த ஆண்டு நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் மட்டும் மார்ச் மாதம் வரை மீன் பிடித்துக் கொள்ளலாம் என்றும், அதன் பிறகு இந்த பிரச்சினைக்கு கோர்ட்டு மூலம் தீர்வு காண வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து ஒரு பெரிய படகில் மீனவர்கள், மீன்பிடித்துக் கொண்டு கோடியக்கரை அருகே வந்தனர். அப்போது படகு பழுதாகி விட்டதாக தெரிகிறது.

தள்ளு முள்ளு

இதற்கிடையில் வெளியூர் மீனவர்கள் கோடியக்கரையில் மீன்பிடிப்பதாக தகவல் வந்ததால் வேதாரண்யம் மீன்வளத்துறை அதிகாரிகளும், கடலோர காவல் படை போலீசாரும் கடலுக்கு படகில் சென்றனர். கோடியக்கரை மீனவர்களும் சென்றனர். அப்போது நடுக்கடலில் போலீசாருக்கும், பாம்பன் மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் அவர்களுக்கு இடையே தள்ளு முள்ளுவும் ஏற்பட்டது. பாம்பன் மீனவர்களுக்கு ஆதரவாக கோடியக்கரை மீனவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அதிகாரிகளும், போலீசாரும் கடற்கரைக்கு திரும்பி விட்டனர்.

பரபரப்பு

இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேசிடம், மீன்வளத்துறை ஆய்வாளர் நடேசராஜா புகார் கொடுத்தார். மேலும் அவரிடம், கோடியக்கரை மீனவ நல உரிமை சங்கத்தினரும் புகார் கொடுத்தனர்.கடலில் பாம்பன் மீனவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story