முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதல்
திருமங்கலம் நான்குவழிச்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.
திருமங்கலம்,
கடலூர் மாவட்டத்தில் இருந்து நெல் மூடைகளை ஏற்றிக்கொண்டு தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திருமங்கலம்-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் ராஜபாளையம் சாலை பிரியும் இடத்தின் அருகே பாலத்தில் ஏறிக் கொண்டிருந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலியை நோக்கி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வேனை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த பொன்ராஜ் (வயது 25) என்பவர் ஓட்டி வந்தார். எதிர்பாராத விதமாக முன்னால் நெல் மூடைகளை ஏற்றிச் சென்ற லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் வேன் லாரிக்குள் சிக்கிக்கொண்டது. இந்த விபத்தில் வேனின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. வேன் டிைரவர் பொன்ராஜ் பலத்த காயத்துடன் உள்ளே சிக்கிக்கொண்டார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலை உதவி வாகனத்திற்கு தகவல் அளித்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியில் சிக்கிய வேன் மீட்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.