வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற காய்கறி வியாபாரி கைது
வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற காய்கறி வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி ஞானகிரிரோட்டில் வசித்து வருபவர் ரத்தினவேல் மனைவி வசந்தாதேவி (வயது 73). இவர் வீட்டில் தனியாக இருந்த போது காய்கறிகளை விற்பனை செய்ய ஒருவர் வந்தார். வசந்தாதேவி காய்களை வாங்கி விட்டு பணம் எடுப்பதாக வீட்டிற்கு சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற காய்கறி வியாபாரி மூதாட்டியை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார். அப்போது வசந்தாதேவியின் மருமகள் துர்காதேவி சத்தம் போட்டார். இதையடுத்து பொதுமக்கள் வியாபாரியை பிடித்து சிவகாசி கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த வியாபாரி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாகுளம் பகுதியை சேர்ந்த தங்கரத்தினம்(43) என்பது தெரியவந்தது. இதையடுத்து தங்கரத்தினத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கொரோனா மருத்துவ பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற போது தங்கரத்தினம் தப்பி ஓட முயன்றார். இதில் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்தபோது காயம் ஏற்பட்டது. உடனே அவரை போலீசார் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தப்பி ஓட முயன்றது குறித்து போலீஸ்காரர் முத்துப்பாண்டி சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.