கயத்தாறு அருகே பட்டப்பகலில் துணிகரம்:கல்லூரி மாணவரிடம் அரிவாளை காட்டி நகை, பணம் வழிப்பறி


கயத்தாறு அருகே பட்டப்பகலில் துணிகரம்:கல்லூரி மாணவரிடம் அரிவாளை காட்டி நகை, பணம் வழிப்பறி
x
தினத்தந்தி 13 July 2023 12:15 AM IST (Updated: 13 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே பட்டப்பகலில் கல்லூரி மாணவரிடம் அரிவாளை காட்டி நகை, பணம் வழிப்பறி செய்த முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே நேற்று பட்டப்பகலில் மொபட்டில் சென்ற கல்லூரி மாணவரை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி நகைகள், பணத்தை வழிப்பறி செய்த 3 முகமூடி கொள்ளயர்களுக்கு போலீசார் தேடிவருகின்றனர்.

கல்லூரி மாணவர்

கயத்தாறு அருகேயுள்ள அகிலாண்டபுரம் கீழ்த் தெருவில் வசித்து வருபவர் அய்யாத்துரை. விவசாயி. இவரது மகன் சின்னராஜ் (வயது 18). இவர் சிவகாசியிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.இ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்துள்ளார். கல்லூரிக்கான கட்டணத்தை கயத்தாறிலுள்ள கணினி மையம் ஒன்றின் மூலம் ஆன்லைனில் செலுத்துவதற்காக பெற்றோரிடம் ரூ.25 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார். அந்த பணத்தை ஆன்லைனில் செலுத்துவதற்காக, தாத்தாவின் மொபட்டில் நேற்று மதியம் அகிலாண்டபுரத்திலிருந்து கயத்தாருக்கு சென்று கொண்டிருந்தார். கடம்பூர்-கயத்தாறு சாலையில் சென்று கொண்டிருந்த அவரை சோசியர்மடம் அருகே முகமூடி அணிந்த 3 பேர் திடீரென்று வழிமறித்து நிறுத்தியுள்ளனர். அவர்கள் கைலி, பனியன் அணிந்திருந்துள்ளனர்.

நகை, பணம் வழிப்பறி

அந்த 3 முகமூடி கொள்ளையர்களும் அரிவாளை காட்டி மிரட்டி சின்னராஜ் அணிந்திருந்த ½ பவுன் மோதிரம், வெள்ளி மோதிரம் மற்றும் மொபட்டின் பெட்டியில் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை பறித்துள்ளனர். பின்னர் மறைவில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி 3 பேரும் தப்பி சென்று விட்டனர்.

முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து சின்னராஜ் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவரிடம் வழிப்பறி செய்த 3 முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

கயத்தாறு அருகே பட்டப்பகலில் கல்லூரி மாணவரிடம் முகமூடிகொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story