குடிபோதையில் கிணற்றில் விழுந்தவர் பலி
குன்னூர் அருகே குடிபோதையில் கிணற்றில் விழுந்தவர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னூர்,
ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்தவர் சையத் கலிமுல்லா (வயது 58). டிரைவர். நேற்று முன்தினம் இவர் குன்னூர் வெலிங்டன் பகுதியில் உள்ள தனது சகோதரர் சையத் சலிமுல்லா வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்து உள்ளார். பின்னர் சையத் கலிமுல்லா வெளியே சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் உறவினர்கள் நேற்று காலையில் தேடினர். அப்போது அப்பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் கிணற்றில் சையத் கலிமுல்லா பிணமாக மிதந்தார். தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சையத் கலிமுல்லா குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து வெலிங்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.