ரூ.300 லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை உறுதி


ரூ.300 லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை உறுதி
x

ரூ.300 லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அதிகாரிக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய ஒரு ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையம் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் பெரியசாமி. அதே கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர், தன் மனைவியின் பெயரில் தாட்கோ மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவில் கடன் வாங்க சாதி மற்றும் வருமான சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்தார்.

இந்த சான்றிதழ்களை வழங்க கிராம நிர்வாக அதிகாரி பெரியசாமி ரூ.300 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் லஞ்ச ஒழிப்பு போலீசில், குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரசாயனம் கலந்த ரூ.300 நோட்டுகளை கொடுத்தனர், இந்த பணத்தை லஞ்சமாக வாங்கும்போது, கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 17-ந்தேதி பெரியசாமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மொய் பணம்

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு கோர்ட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, பெரியசாமிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக கடந்த 2016-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பெரியசாமி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

பெரியசாமி தரப்பில் ஆஜரான வக்கீல், பெரியசாமியின் மகனுக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு வர முடியவில்லை என்று கூறி பெரியசாமியின் சட்டை பாக்கெட்டில் புகார்தாரர் குமார் ரூ.300-யை வைத்துள்ளார். மொய் பணம் என்று இவரும் அமைதியாக இருந்து விட்டார்'' என்று வாதிட்டார்.

தண்டனை உறுதி

ஆனால், இந்த வாதத்தை ஏற்க முடியாது. போலீஸ் தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களில், வெற்று வருமானச் சான்றிதழை பெரியசாமி கொடுத்து, அதை நிரப்பிக் கொள்ளும்படி குமாரிடம் கூறியுள்ளார். எனவே, லஞ்ச குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது. எனவே, கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதிச்செய்கிறேன். எனவே, சிறை தண்டனையை அனுபவிக்க பெரியசாமியை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story