விவசாய விளைப்பொருட்களை சேமிக்க கிடங்கு அமைக்க வேண்டும்


விவசாய விளைப்பொருட்களை சேமிக்க கிடங்கு அமைக்க வேண்டும்
x

விவசாய விளைப்பொருட்களை சேமித்திட கிடங்கு அமைக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

வேலூர்

விவசாய விளைப்பொருட்களை சேமித்திட கிடங்கு அமைக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வேளாண்மைதுறை இணை இயக்குனர் விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைள் மற்றும் குறைகளை தெரிவித்தனர்.

அவற்றின் விவரம் வருமாறு:-

சேமிப்பு கிடங்கு

காட்பாடி கரிகிரி பெரிய ஏரி மற்றும் ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பேரணாம்பட்டு பத்தரப்பல்லி ஆற்றில் அதிகளவு மணல் கொள்ளை நடக்கிறது. இதனை தடுக்க நேரில் களஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர், அணைக்கட்டு பகுதிகளில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். வேளாண் வணிகத்துறையின் மூலம் விவசாய விளைபொருட்களை சேமித்திட ஆங்காங்கே கிடங்கு அமைக்க வேண்டும். மேலும் விவசாய விளைப்பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரம்மபுரம் பகுதியில் விவசாய நிலங்களில் மழைநீர் வடியாமல் உள்ளது. அதனை அகற்றி பயிர் சாகுபடி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் சான்றிதழ் கொடுத்தால் போதுமானது. ஆனால் தற்போது வேளாண்துறை சான்றும் கேட்கிறார்கள்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அவற்றை கேட்டறிந்த கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறுகையில், நீர்நிலை உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கு வேளாண்துறை அலுவலர், வருவாய்த்துறை அலுவலர் ஒரே படிவத்தில் கையெழுத்து போடும் வகையில் புதிய படிவம் வெளியிடப்படும். மேலும் அனைத்து கோரிக்கைகளும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உரிய தீர்வு காணப்படும் என்றார்.

கூட்டத்தில், அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story