கழிவறைகளாக மாறி வரும் வாரச்சந்தை கட்டிடம்


கழிவறைகளாக மாறி வரும் வாரச்சந்தை கட்டிடம்
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் வாரச்சந்தை கட்டிடம் கழிவறைகளாக மாறி வருகிறது.

கடலூர்

விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் வாரந்தோறும் ஒவ்வொரு வார்டுகளிலும் நிலவும் மக்களின் பிரச்சினைகள் குறித்து அலசி ஆராய்ந்து வருகிறோம். அந்த வகையில் இன்று (புதன்கிழமை) 15-வது வார்டில் உள்ள பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்...

தூர்வாரப்படாத கால்வாய்கள்

விருத்தாசலம் நகராட்சி 15-வது வார்டில் தான் தினசரி காய்கறி மார்க்கெட், மீன் இறைச்சி மார்க்கெட், வாரச்சந்தை ஆகியவை அமைந்துள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த வார்டு பகுதிக்கு, அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தாலும், மக்களின் பல பொது பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன. குறிப்பாக வார்டு முழுவதும் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. காட்டுக்கூடலூர் சாலையில் கழிவுநீர் செல்லும் கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது.

குடிநீர் வினியோகம் இல்லை

திருவள்ளுவர் நகர் 12-வது குறுக்குத்தெருவில் சிமெண்டு சாலைகள் பெயர்ந்து பெரும் பள்ளமாக காணப்படுகிறது. மேலும் அப்பகுதியில் தேங்கிய கழிவுநீரில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்து மேய்ந்து திரிவதால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் திருவள்ளுவர் நகர் மேடான பகுதியாக இருப்பதால் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்திற்கு சென்று விட்டதால், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகின்றனர். காய்கறி மார்க்கெட் வளாகத்திற்குள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் உள்ளே வரவழியுண்டு. ஆனால் வெளியே செல்ல வழியில்லை. வாகனங்கள் வெளியே வரக்கூடிய வழி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

காட்சிப்பொருளான மார்க்கெட்

இதனால் விழாக்காலங்களிலும், வாரச்சந்தை நாட்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இங்கு 90 கடைகள் இருந்தும், 30 கடைகள் மட்டுமே இயங்குகிறது. காரணம், ஒவ்வொரு கடைக்கும் தேவையான அளவு இட ஒதுக்கீடு செய்யாததாலும், அடிப்படை வசதிகள் இல்லாததாலும் அதில் வியாபாரிகள் வியாபாரம் செய்ய முன்வராததாலும் காட்சிப் பொருளாக மாறியுள்ளது.

மேலும் சிலர் வாரச்சந்தை கட்டிடத்தை கழிவறைகளாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இந்த காய்கறி மார்க்கெட்டை இடித்து அகற்றிவிட்டு புதிய மார்க்கெட் அமைப்பதற்கான நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், தற்போது இருக்கும் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு தேவையான குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் போதும் என்கிறார்கள். இதுகுறித்து அந்த வார்டு மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

வாடகையை குறைக்க வேண்டும்

காய்கறி மார்க்கெட் வியாபாரி சேகர்:- விருத்தாசலம் தினசரி காய்கறி மார்க்கெட்டை இடிக்க கூடாது. இந்த மார்க்கெட்டையே புனரமைப்பு செய்து, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். வெளிநபர்களிடம் கடையை வாடகைக்கு கொடுத்து உள்வாடகை விடுவதை தவிர்த்து வியாபாரிகளுக்கு மட்டும் கடைகளை வாடகைக்கு கொடுக்க வேண்டும். வாடகையை குறைத்து வசூலித்தால் வியாபாரிகள் அனைவரும் இங்கு வியாபாரம் செய்ய முன்வருவார்கள். இதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகள் ஆய்வு

வக்கீல் அம்பேத்கர்:- ஜாகீர் உசேன் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை தூர்வாராததால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. கொசுமருந்து அடித்து பல மாதங்கள் ஆகிவிட்டது. கொசுக்கள் உற்பத்தி பெருகி நோய் பரவி வருவதை தடுக்க வேண்டும். பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலைகள் குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாய்க்கற்ற நிலையில் உள்ளது. அதனால் சாலையை சீரமைத்துத்தர வேண்டும். வார்டு பகுதியை அவ்வப்போது நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து மக்கள் குறைகளை உடனுக்குடன் களைய வேண்டும்.

சிமெண்டு சாலை

விஜயன்:- நபிகள் நாயகம் தெரு-ஜாகீர் உசேன் தெரு இணைப்பில் உள்ள பள்ளிவாசல் தெரு சாலை, மண் சாலையாக உள்ளது. இந்த சாலையை கழிவுநீர் கால்வாயுடன், சிமெண்டு சாலையாக அமைத்துத்தர வேண்டும். திருவள்ளுவர் தெருவில் 6 மற்றும் 8-வது குறுக்குத்தெரு சாலைகளை உடனடியாக சீரமைத்துத்தர வேண்டும். காட்டுக்கூடலூர் சாலையில் மாவட்ட கல்வி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பார்க்கிங் சாலை அமைக்கப்பட்டு, அந்த பணி பாதி தான் முடிவடைந்துள்ளது. அதனால் மீண்டும் பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும்.


Next Story