100 வார்டுகளில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - மாமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. வலியுறுத்தல்
100 வார்டுகளில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மாமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. வலியுறுத்தியது.
100 வார்டுகளில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மாமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. வலியுறுத்தியது.
ரூ.20 கோடி வசூல்
மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது. கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மேயர் இந்திராணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மாமன்றத்தில் கவுன்சிலர்கள் பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவு பெற்றுள்ளது. மதுரை மாநகராட்சி சிறப்பாக செயல்பட சாக்கடை, குடிநீர் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்குரிய வாகனங்களும் சரி செய்ய வேண்டும். இதற்கு வருவாய் நிதி அதிகம் தேவைப்படும். எனவே வருவாயை பெருக்க நிலுவை வரியை வசூல் செய்ய 100 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் இந்த குழுவினர் ரூ.20 கோடி வசூல் செய்து உள்ளனர். மதுரை நகருக்கு குடிநீர் வழங்கும் முல்லை பெரியாறு குடிநீர் திட்டம், வருகின்ற டிசம்பர் மாதத்தில் முடிகின்ற வகையில் பணிகள் நடந்து வருகிறது. மதுரையில் இசை மேதை டி.எம். சவுந்திரராஜனுக்கு சிலை அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து சுகாதார குழு தலைவர் ஜெயராஜ் மாமன்ற உறுப்பினர்களுக்கு பேனாக்களை வழங்கினார்.
வெள்ளை அறிக்கை
அதற்கிடையில் அ.தி.மு.க. எதிர்கட்சி தலைவர் சோலைராஜா எழுந்து, ஒவ்வொரு மாமன்ற கூட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே மாமன்ற கூட்டம் தீர்மானம் வழங்கப்பட வேண்டும். ஆனால் இப்போது தீர்மானம் நகல் வரவில்லை என்றார். அதற்கு மேயர், இனி முறையாக குறித்த நேரத்தில் தீர்மானம் நகல் வழங்கப்படும். இந்த தவறுக்கு வருந்துகிறேன் என்றார். அதன்பின் திடீரென எழுந்த பா.ஜனதா கட்சி கவுன்சிலர் பூமா, மாநகராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். மேயர் அவரை அமரும்படி கூறினார். ஆனால் தொடர்ந்து அவர் கோஷம் எழுப்பியபடி இருந்தார். எனவே அவரை சபை காவலர் மூலம் மேயர் வெளியேற்றினார்.
தொடர்ந்து மண்டல தலைவர்கள் பேசினர். அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. எதிர்கட்சி தலைவர் சோலைராஜா பேசினார். அப்போது அவர் மாநகராட்சியில் நாங்கள் கவுன்சிலர்களாக பொறுப்பேற்று ஒரு ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த ஒரு ஆண்டில் எனது வார்டில் ஒரு பணி கூட நடைபெறவில்லை. எனது வார்டு மட்டுமல்ல, பெரும்பாலான வார்டுகளில் எந்த பணியும் நடப்பதில்லை. எனவே மாநகராட்சி, கடந்த ஓராண்டில் 100 வார்டுகளில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. எனவே இதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து மாநகராட்சியில் விவாதம் நடந்தது.