நாட்டு வெடிகுண்டை கவ்வியதால் வாய் சிதறிய காட்டுப்பன்றி


நாட்டு வெடிகுண்டை கவ்வியதால் வாய் சிதறிய காட்டுப்பன்றி
x

தாழக்குடியில் நாட்டு வெடிகுண்டை கவ்வியதால் வாய் சிதறிய காட்டுப்பன்றி ஊருக்குள் வந்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

தாழக்குடியில் நாட்டு வெடிகுண்டை கவ்வியதால் வாய் சிதறிய காட்டுப்பன்றி ஊருக்குள் வந்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உலா வரும் காட்டுப்பன்றிகள்

தாழக்குடி பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. தற்போது இந்த நிலங்களில் ஒரு சில இடங்களில் விவசாயிகள் வாழை, மரவள்ளிக்கிழக்கு போன்ற பயிர்களை பயரிட்டுள்ளனர். இந்த நிலங்களையொட்டி மலைப்பகுதி உள்ளது.

இதனால் மலைப்பகுதியில் இருந்து அவ்வப்போது காட்டுப்பன்றிகள் உணவைத்தேடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தேசப்படுத்தி வருகின்றன. மேலும் இவ்வாறு வரும் காட்டுப்பன்றிகள் சில நேரங்களில் ஊருக்குள்ளும் உலா வருகின்றன.

வாய் சிதறிய நிலையில்...

இந்தநிலையில் நேற்று தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட விளாங்காட்டு காலனியில் உள்ள தெருக்களில் ஒரு காட்டுப்பற்றி வாய் சிதறிய நிலையில் ரத்தம் சொட்டச்சொட்ட அங்கும், இங்குமாக ஓடியது. இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் இதுபற்றி அந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையே தெருக்களில் ஓடிய அந்த காட்டுப்பன்றி சிறிது நேரத்தில் அந்த பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டு பின்புறம் உள்ள காலியிடத்தில் விழுந்து பரிதாபமாக இறந்தது.

நாட்டு வெடிகுண்டு

இதுபற்றி தகவல் அறிந்த பூதப்பாண்டி வனச்சரகர் ரவீந்திரன் உத்தரவின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காட்டுப்பன்றியின் உடலை கைப்பற்றினர். பின்னர் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து காட்டுப்பன்றி உடலை வனத்துறை வளாகத்திற்கு கொண்டு சென்று புதைத்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க உணவுடன் கலந்து வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டை காட்டுப்பன்றி கவ்வியதால் வாய் சிதறி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், இதுகுறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story