தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம்
களக்காடு அருேக தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது.
களக்காடு:
களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சிதம்பரபுரம், சிவபுரம், கள்ளியாறு பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் காணப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து, இடம்பெயர்ந்து வந்த ஒற்றை யானை, மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் மலையடிவார புதர்களில் தஞ்சமடைந்து இரவில் உணவுக்காக விளைநிலங்களுக்குள் புகுந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவில் களக்காடு கள்ளியாறு பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை அங்குள்ள கெனி டேவிஸ் என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கிருந்த 2 தென்னை, 1 பனை மரத்தை வேருடன் சாய்த்து அட்டகாசம் செய்தது. யானை சத்தத்தை கேட்டு வந்த விவசாயிகள் தீ பந்தங்கள் கொளுத்தி யானையை விரட்டினர். இதுபோல் சிதம்பரபுரம் சத்திரங்காடு பகுதியில் புகுந்த யானை விவசாயிகள் சந்திரசேகர், மகேஷ் ஆகியோரது விளைநிலங்களுக்குள் சென்று, பனம் பழங்களை தின்று நாசம் செய்துள்ளது. பிறகு மலையடிவார புதர்களுக்குள் சென்று விட்டது.
இதுபற்றி நெல்லை மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி தலைவர் சேர்மன் துரை கூறுகையில், யானை நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். பகல் நேரங்களில் கூட விளைநிலங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதனால் விவசாயிகளின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.