வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை


வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கூடலூருக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதனால், யானையை விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூருக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதனால், யானையை விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

காட்டு யானை

கூடலூர் நகருக்குள் காட்டு யானை ஒன்று தினமும் வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காலையில் எம்.ஜி.ஆர். நகர் வழியாக கோழிக்கோடு சாலையில் காட்டு யானை ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதேபோல் ராஜகோபாலபுரம், ஹெல்த்கேம்ப் உள்பட பல இடங்களில் காட்டு யானை இரவில் வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தோட்டமூலா பகுதிக்கு காட்டு யானை வந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை மரங்கள், முட்டைக்கோஸ் பயிர்களை தின்று சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். தொடர்ந்து இரவில் பொதுமக்களின் குடியிருப்புகளை யானை முற்றுகையிட்டது. இதனால் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் வீடுகளுக்குள் பொதுமக்கள் முடங்கினர்.

விரட்ட கோரிக்கை

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கூடலூருக்குள் தினமும் காட்டு யானை புகுந்து வருகிறது. இதனால் அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. மேலும் முக்கிய சாலைகளில் வருவதால் வாகனங்களில் செல்லவே அச்சமாக உள்ளது. காட்டு யானை அச்சுறுத்தலால் டியூசனுக்கு சென்று விட்டு, குழந்தைகள் வீடு திரும்பும் வரை பதற்றத்துடன் இருக்க வேண்டிய நிலை தொடர்கிறது.

எனவே, காட்டு யானை ஊருக்குள் வராமல் இருக்கவும், கூடலூரில் இருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story