தேயிலை தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை


தேயிலை தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை
x

பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்துக்குள் காட்டு யானை புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்துக்குள் காட்டு யானை புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

காட்டு யானை

பந்தலூர் அருகே இரும்புபாலம், மேங்கோரேஞ்ச், தேவகிரி நீர்மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. அங்கு பொதுமக்களின் குடியிருப்புகளை யானைகள் தாக்குவதுடன், முற்றுகையிட்டு வருகிறது. மேலும் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்மை, பாக்கு மற்றும் பயிர்களை சேதப்படுத்துகின்றன. சில நேரங்களில் தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்களை துரத்தி வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பந்தலூர் அருகே இரும்புபாலம் குடியிருப்பு பகுதிக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. தொடர்ந்து குடியிருப்புகளை முற்றுகையிட்டது. அங்குள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் அய்யனார், வனவர் சிவகுமார், வனகாப்பாளர் தம்பகுமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்கள் ஓட்டம்

அப்போது யானை அங்கிருந்து செல்லாமல் குடியிருப்புக்கு உள்ளே அங்குமிங்கும் சுற்றி வந்து போக்கு காட்டியது. இதனால் வனத்துறையினர் விடிய, விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று காலை அந்த யானை அதே பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு பச்சை தேயிலை பறித்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் யானை வருவதை கண்டு அச்சம் அடைந்தனர். பின்னர் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சாலைகளில் யானைகள் உலா வந்து, வழிமறிப்பதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே, காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.



Next Story