மலைப்பாதையில் உலா வந்த காட்டுயானை
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் இடையே மலைப்பாதையில் உலா வந்த காட்டுயானையால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் இடையே மலைப்பாதையில் உலா வந்த காட்டுயானையால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காட்டுயானைகள் முகாம்
கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் உள்ள பலா மரங்களில் காய்த்திருந்த பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் வந்து முகாமிட்டு வருகின்றன. இவை ஆண்டுதோறும் சீசன் முடிந்தவுடன் மீண்டும் சமவெளி பகுதிகளுக்கு திரும்பி செல்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பலாப்பழ சீசன் முடிந்தும் கூட காட்டு யானைகள் சமவெளி பகுதிக்கு திரும்பி செல்லாமல் குட்டிகளுடன் இதே பகுதியில் முகாமிட்டுள்ளன. இவ்வாறு முகாமிட்டுள்ள யானைகளில், ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று அவ்வழியாக செல்லும் அரசு பஸ், கார், பள்ளி வாகனம் உள்ளிட்ட வாகனங்களை தொடர்ந்து மறித்து சேதப்படுத்தி வருகிறது.
அணிவகுத்து நின்ற வாகனங்கள்
இந்தநிலையில் நேற்று காலை 8 மணியளவில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் முள்ளூர் அருகே அந்த காட்டு யானை சாலையின் குறுக்கே நின்று கொண்டு இருந்தது. இதை கண்ட வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். மேலும் சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தினர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையின் இரு புறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சற்று நேரம் சாலையில் நின்றுக் கொண்டு இருந்த காட்டு யானை, அதன்பின்னர் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றது. யானை அங்கிருந்து சென்ற பின்னரே அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.
அகழி வெட்ட வேண்டும்
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து முகாமிட்டு வருவதுடன், சாலையில் செல்லும் வாகனங்களை தாக்கி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. எனவே காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காட்டு யானைகள் சாலைக்கு வராத வகையில் அகழி வெட்டவோ அல்லது தடுப்புகள் அமைக்கவோ வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.