சாராய ஊறலை குடித்துவிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டு யானை


சாராய ஊறலை குடித்துவிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டு யானை
x

பேரணாம்பட்டு அருகே சாராய ஊறலை குடித்துவிட்டு காட்டு யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதனால் சாராய வியாபாரிகள் அலறியடித்து ஓடினர்.

வேலூர்

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே சாராய ஊறலை குடித்துவிட்டு காட்டு யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதனால் சாராய வியாபாரிகள் அலறியடித்து ஓடினர்.

காட்டு யானை

வேலூர் மாவட்டம்பேரணாம்பட்டு அருகே 2 நாட்களுக்கு முன்பு ஆந்திர வனப் பகுதியிலிருந்து ஒற்றை காட்டு யானை தமிழக எல்லைக்குள் வந்து, விவசாய நிலங்களுக்குள் புகுந்து நெல், கரும்பு, வாழை பயிர்களையும், மாந்தோப்பையும் சூறையாடி அட்டகாசத்தில் ஈடுபட்டது.

இந்த பீதி அடங்குவதற்குள் பேரணாம்பட்டு வனச்சரகம் மோர்தானா காப்புக்காடு பகுதிக்குள் சுற்றித்திரிந்து வரும் ஆண் யானை ஒன்று திடீரென குண்டலப்பல்லி வனப்பகுதி வழியாக நுழைந்து சாத்கர் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக சுற்றி வந்தது. இந்த மலைப்பகுதியில் உள்ள பால் சுனை, மாமரத்துப் பள்ளம், பன்னீர் குட்டை, கங்காச்சரம், அல்லேரி உள்ளிட்ட பகுதிகளில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் ஊறல்கள் வைத்திருந்தனர்.

சாராய ஊறலை குடித்து அட்டகாசம்

இந்தப்பகுதிக்கு வந்த காட்டுயானை சாராய ஊறல்களை குடித்துள்ளது. இதனால் பயங்கரமாக பிளிறியவாறு அங்கிருந்த சாராய வியாபாரிகளை துரத்தியது. சாராய வியாபாரிகள் தலைதெறிக்க தப்பியோடினர். இந்த நிலையில் மலையிலிருந்து இறங்கிய யானை பங்களாமேடு பகுதியில் உள்ள பள்ளி வளாகம் வழியாக பேரணாம்பட்டு - குடியாத்தம் நெடுஞ்சாலையில் அதிகாலை 2.55 மணியளவில் சுற்றித் திரிந்தது.

அப்போது பங்களாமேட்டில் உள்ள வனத்துறையின் ஓய்வு விடுதி மற்றும் வனச்சரக குடியிருப்பு கேட்டை காலால் உதைத்து உள்ளே நுழைந்து பயங்கரமாக பிளிறியது. அப்போது வன ஓய்வு விடுதிக்கு எதிரே நெடுஞ்சாலை பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த சம்பத் (60) இதை பார்த்து கூச்சலிட்டார். இதனையறிந்த குடியிருப்பில் தூங்கிக் கொண்டிருந்த பேரணாம்பட்டு வனச்சரகர் சதீஷ்குமார் (28) மற்றும் வனவர் ஹரி, வனகாப்பாளர் வெங்கடேசன், வன காவலர் ரவி மற்றும் வனத்துறையினர், பொதுமக்கள், பேரணாம்பட்டு தீயணைப்பு படையினர் ஆகியோர் உதவியுடன் பட்டாசு வெடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி யானையை விரட்டினர்.

பின்னர் அதிகாலை 5.30 மணியளவில் வந்த வழியாக திரும்பி சென்று கோட்டைச்சேரி கிராமத்திற்குள் புகுந்து ரோட்டை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னரே வனத்துறையினர் நிம்மதியடைந்தனர்.


Related Tags :
Next Story