தேவர்சோலை அருகே வீட்டை முற்றுகையிட்டு சேதப்படுத்திய காட்டு யானை-ஆதிவாசி மக்கள் உயிர் தப்பினர்
தேவர்சோலை அருகே வீட்டை முற்றுகையிட்டு காட்டு யானை பொருள்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து 2 பேரை தாக்க முயன்றது. பின்னர் உறவினர் ஒருவர் அவர்களை காப்பாற்றியதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.
கூடலூர்
தேவர்சோலை அருகே வீட்டை முற்றுகையிட்டு காட்டு யானை பொருள்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து 2 பேரை தாக்க முயன்றது. பின்னர் உறவினர் ஒருவர் அவர்களை காப்பாற்றியதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.
காட்டு யானை அட்டகாசம்
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி செம்பக்கொல்லி ஆதிவாசி கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறது. இங்கு காட்டு யானைகள் ஊருக்குள் வருகிறது. கடந்த சில வாரங்களாக ஒரு காட்டு யானை தினமும் வந்து வீடுகளை முற்றுகையிட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது வீட்டை காட்டு யானை முற்றுகையிட்டது. அப்போது வீட்டுக்குள் சந்திரன் குடும்பத்தினர், உறவினர்கள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் காட்டு யானை வீட்டில் இருந்த மேஜை, நாற்காலி மற்றும் அறுவடை செய்து வைத்திருந்த குறுமிளகு, காபி விதைகளை சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு சந்திரன் குடும்பத்தினர் எழுந்தனர்.
தாக்க முயன்றது
அப்போது உறவினர்கள் சங்கர், விஜய் ஆகியோரை தும்பிக்கையால் இழுத்து தாக்க முயன்றது. இதைக் கண்ட சந்திரன் ஓடிவந்து அவர்களை காப்பாற்றினார். தொடர்ந்து பயத்தில் ஆதிவாசி மக்கள் சத்தம் போட்டனர். இதன் காரணமாக கிராம மக்கள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அனைவரும் உயிர் தப்பினர்.
இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறியதாவது:- கடந்த சில நாட்களாக ஒரு யானை மட்டும் வீட்டில் உள்ள அரிசி, பருப்பு, உப்பு சாப்பிட்டு பழகிவிட்டது. இதனால் தொடர்ந்து வீடுகளை முற்றுகையிட்டு பொருட்களை சேதப்படுத்துகிறது. தற்போது அறுவடை செய்த காபி, குறுமிளகுகளை மிதித்து நாசம் செய்து விட்டது. இதுதொடர்பாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கவில்லை. பேரூராட்சி அலுவலகத்தில் மட்டும் புகார் செய்யப்பட்டது. எனவே காட்டு யானை வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.