கடையை அகற்றுவதை எதிர்த்து பெண் தற்கொலை முயற்சி


கடையை அகற்றுவதை எதிர்த்து பெண் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டிய கடையை இடித்து அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, பெண் தற்கொலைக்கு முயன்றார். இதனால் அறநிலையத்துறை அதிகாரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டிய கடையை இடித்து அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, பெண் தற்கொலைக்கு முயன்றார். இதனால் அறநிலையத்துறை அதிகாரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

டீக்கடை நடத்தி வரும் பெண்

நாகர்கோவில் வடசேரியில் ஆதிமூல விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் எம்.எஸ். ரோடு ராஜபாதை பகுதியில் உள்ளது. இந்த இடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த நிஷா பாப்பா என்ற பெண் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் கோவில் இடத்தை ஆக்கிரமித்து டீக்கடை நடத்தி வந்ததால் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் அபராதம் விதித்தது. அத்துடன் அந்த தொகையை செலுத்த 3 மாத கால அவகாசம் கொடுத்திருந்தது.

ஆனால் அந்த தொகையை அவர் செலுத்தவில்லை. இதனால் உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து 3 முறை நோட்டீஸ் அனுப்பி, ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் கடை அகற்றப்படவில்லை. இதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில் நேற்று காலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தங்கம் தலைமையிலான ஊழியர்கள் எம்.எஸ்.ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.

ஆக்கிரமிப்பு அகற்றம் நிறுத்தம்

வழக்கம்போல் நேற்றும் நிஷா பாப்பா கடையை திறந்திருந்தார். அப்போது அறநிலைய துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்து கடைக்குள் இருந்த அவரை வெளியேறுமாறு கூறினர். ஆனால் நிஷா பாப்பா கடையை விட்டு வெளியேற மறுத்து, ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர் கடையின் உள்ளேயே அமர்ந்திருந்தார்.

அத்துடன் அவர், "நான் கடந்த 20 ஆண்டுகளாக இந்த கடையை நம்பி குடும்பத்தை நடத்தி வருகிறேன். எனக்கு எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காமல் திடீரென கடையை இடிக்க வந்துள்ளார்கள். எனவே கடையை இடிக்க விடமாட்டேன். எனது மகளுக்கு இன்னும் 15 நாளில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த டீக்கடையில் உள்ள வருமானத்தை வைத்துதான் எனது 2 மகள்களையும் காப்பாற்றி வருகிறேன்" என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மீண்டும் பொக்லைன் எந்திரம் உதவியுடன் கடையை இடிக்க முயன்ற போது கடைக்குள் இருந்த நிஷா பாப்பா தனது உடலில் மண் எண்ணெய்யை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடனே அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். ஆனாலும் நிஷா பாப்பா கடையை விட்டு வெளியே வராமல் உள்ளே அமர்ந்திருந்தார். மேலும் போதிய போலீசார் இல்லாததால் அந்த கடையை இடித்து அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.

அதிகாரி புகார்

இதுதொடர்பாக உதவி ஆணையர் தங்கம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். மேலும் போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். அதனால் போலீசார் தெரிவிக்கும் நாளில் இந்த ஆக்கிரமிப்பை இடித்து அகற்றுவோம் என்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தங்கம் தெரிவித்தார். அதேநேரத்தில் அதே பகுதியில் இருந்த மற்றொரு ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.


Next Story