மொபட் மீது கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி


மொபட் மீது கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
x
தினத்தந்தி 5 July 2023 11:45 PM IST (Updated: 6 July 2023 11:54 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலையில் மொபட் மீது கார் மோதிய பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கரூர்

கார் மோதி கவிழ்ந்தது

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளி சீனிவாசா நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி சியாமளா (வயது 40). அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி சித்ரா (30). உறவினர்களான இவர்கள், 2 பேரும் நேற்று மொபட்டில் (ஸ்கூட்டி) கரூர் - திருச்சி புறவழிச் தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.

அந்த சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையின் எதிரே திருச்சியை நோக்கி சென்ற ஒரு காரின் டயர் பஞ்சரானதால் கட்டுப்பாட்டை இழந்து வலது பக்கமாக திரும்பி சாலையின் இடது புறம் சென்று கொண்டிருந்த மொபட் மீது மோதி சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழந்தது. மொபட்டும் பள்ளத்தில் விழுந்தது.

பெண் பலி-3 பேர் படுகாயம்

இதில் மொபட்டில் சென்ற சியாமளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சித்ரா மற்றும் காரில் இருந்த திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பூண்டிபாளையம் பகுதியை சேர்ந்த சஞ்சீவி (23), முருங்கை பகுதியை சேர்ந்த சுதீப் (27) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சியாமளா உடல் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சித்ரா மட்டும் மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story