சோழவந்தான் அருகே மொபட்டில் சென்ற பெண்ணை கீழே தள்ளி 25 பவுன் நகை பறிப்பு; 4 பேர் கைது
சோழவந்தான் அருகே மொபட்டில் சென்ற பெண்ணை கீழே தள்ளி 25 பவுன் நகை பறித்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே மொபட்டில் சென்ற பெண்ணை கீழே தள்ளி 25 பவுன் நகை பறித்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 பவுன் நகை பறிப்பு
சோழவந்தானை சேர்ந்த வர் ரீகன். இவருடைய மனைவி காயத்ரி என்ற சோபியா (வயது 33). இவர் கடந்த 19-ந் தேதி ராயபுரத்தில் உள்ள பள்ளியில் தனது மகனை மொபட்டில் அழைத்து சென்று விட்டார். அதன்பிறகு அதே மொபட்டில் காயத்ரி வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது திருமால்நத்தம் அருகே வந்த போது இவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென்று மொபட்டை காலால் மிதித்து தள்ளினர். இதில் தடுமாறி முட்செடியில் காயத்ரி விழுந்தார்.
பின்னர் அவர் அணிந்திருந்த 25 பவுன் நகையை பறித்து கொண்டு அந்த ஆசாமிகள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இது குறித்து சோழவந்தான் போலீசில் காயத்ரி புகார் தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் வழிப்பறி ஆசாமிகளை தேடி வந்தனர்.
4 பேர் கைது
இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக மதுரை செல்லூரைச் சேர்ந்த அய்யனார் (23), விஜய் (26), தத்தனேரி லொடுக்கு பாண்டி (40), பனையூர் அர்ச்சுனன் (எ) அஞ்சனா (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 பவுன் நகை மீட்கப்பட்டது.