ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் கோவில் பெண் ஊழியர் படுகாயம்
ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் கோவில் பெண் ஊழியர் படுகாயமடைந்தார்.
சிறுவாச்சூரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி உமாராணி(வயது 45). இவர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை இவர் வீட்டில் இருந்து வேலைக்கு ஸ்கூட்டரில் சென்றதாக கூறப்படுகிறது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் சுரங்க பாதையை அவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் உமாராணி படுகாயமடைந்தார். இதனை கண்ட பொதுமக்கள் ஓடிச்சென்று உமாராணியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே அந்த சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த ஆண் போலீசார் இந்த விபத்தை கண்டும், காணாமல் நின்றதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சாலையில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளன. அந்த வேகத்தடைகளை மீண்டும் உடனடியாக அமைத்தால், இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் ஓரளவு தடுக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.