கிணற்றில் தவறி விழுந்த பெண் சாவு
நாவல்பழம் பறித்தபோது கிணற்றில் தவறி விழுந்த பெண் சாவு மகளின் கண்எதிரே நிகழ்ந்த பரிதாபம்
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் அருகே சூ.பாலப்பட்டு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மனைவி தேவிகா(வயது 45). இவர் அதே கிராமத்தில் மதுரா காந்திநகர் பகுதியில் கண்ணன் என்பவரது கிணற்றின் அருகே உள்ள நாவல் மரத்தில் ஏறி பழங்களை பறித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தேவிகா நீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். இதைப்பார்த்து அருகில் நின்று கொண்டிருந்த அவரது மகள் மகள் ஜோதிகா கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் கிணறு அதிக ஆழமாக இருந்ததால் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தியாகதுருகம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேவிகாவின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தியாகதுருகம் போலீசார் தேவிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் கண் எதிரே தாய் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.