கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க ஆட்களை ஏவி தன் மீதே திராவகம் வீச வைத்த பெண்; 4 பேர் கைது
கடன்தொல்லையில் இருந்து தப்பிக்க நினைத்த ஒரு பெண், ஆட்களை ஏவி தன் மீதே திராவகம் வீச வைத்த சம்பவம் போலீஸ் விசாரணையில் அம்பலானது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
குலசேகரம்:
கடன்தொல்லையில் இருந்து தப்பிக்க நினைத்த ஒரு பெண், ஆட்களை ஏவி தன் மீதே திராவகம் வீச வைத்த சம்பவம் போலீஸ் விசாரணையில் அம்பலானது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவு மில் நடத்திய பெண்
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே மாடத்தூர்கோணத்தைச் சேர்ந்தவர் லதா (வயது 46). இவருக்கு உறவினர் ஒருவருடன் திருமணமானது. பிறகு ஓரிரு வருடங்களில் லதாவை விட்டு கணவர் பிரிந்து சென்றார்.
இவர்களுடைய மகன் சுபாஷ் (26), ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். லதா சித்திரங்கோடு பகுதியில் மவு மில் வைத்து நடத்தி வைந்தார்.
திராவகம் வீசிய ஆசாமிகள்
லதா சமீபத்தில் கடன் வாங்கி ஆசை, ஆசையாக மாடி வீடு கட்டினார். இதற்காக பலரிடமிருந்து ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் இந்த பணத்தை அவர் அடைப்பதற்கு சிரமப்பட்டுள்ளார். இதனால் கடன்கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர்.
இந்தநிலையில் கடந்த 30-ந் தேதி அன்று இரவு லதா மாவு மில்லில் வேலையை முடித்ததும் மீண்டும் பஸ் ஏறி சொந்த ஊருக்கு வந்தார். பஸ் நிறுத்தத்தில் இறங்கி அவர் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மஆசாமிகள் லதா மீது திராவகத்தை ஊற்றி விட்டு தப்பினர். இதில் லதா தோள்பட்டை, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.
மேலும் திராவகம் பட்டதில் வலி தாங்க முடியாமல் லதா அலறினார். உடனே சத்தம் கேட்டு அங்கு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணை
மேலும், இதுதொடர்பாக குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து. லதா மீது திராவகம் வீசிய நபர்கள் யார்? எதற்காக வீசினார்கள்? என விசாரணை நடத்தினர்.
ஆனால் இதில் எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை. லதாவிடம் விசாரித்த போது, இரவு நேரம் என்பதால் திராவகம் வீசிய ஆசாமிகள் யாரென்று தெரியவில்லை என கூறினார். இதையடுத்து தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் நேரடியாக களம் இறங்கி விசாரணையை முடுக்கினர்.
பகீர் தகவல்கள்
இந்த சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவு, லதா செல்போன் பதிவு சம்பந்தமாகவும் மற்றும் உள்ளூர் நபர்களிடமும் போலீசார் தொடர் விசாரணை நடத்தினர்.
ஆனால் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக போலீசாரே எதிர்பாராத வகையில் லதாவே திட்டமிட்டு தன் மீது திராவகத்தை வீச வைத்தார் என்ற பகீர் தகவல்கள் வெளியானது. இதற்கு லதாவின் உறவினரான ஜெஸ்டின் கிருபை தாஸ் (52), செங்கோடி மச்சிவிளையைச் சேர்ந்த ஜெஸ்டின் ராபின் (39), செங்கோடியைச் சேர்ந்த ஷாஜின் (23), கல்லங்குழியைச் சேர்ந்த அர்ஜூன் குமார் (24) ஆகியோர் உடந்தையாக இருந்ததும் அம்பலமானது.
அதாவது லதா, தனக்கு இருக்கும் கடன் தொல்லை குறித்து நெருங்கிய உறவினரான ஜெஸ்டின் கிருபை தாசிடம் தொடர்ந்து கூறி வேதனை அடைந்துள்ளார். லதா மாவு மில் நடத்தி வரும் கடை அருகே ஜெஸ்டின் கிருபை தாஸ், எலக்ட்ரிக்கல் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இதனால் லதாவை கடன் தொல்லையில் இருந்து தப்ப வைக்கும் நோக்கத்தில் அவர் மீது திராவகம் வீசி காயப்படுத்தும் திட்டத்தை ஜெஸ்டின் கிருபை தாஸ் வகுத்துள்ளார்.
4 பேர் கைது
திராவகம் பட்டு காயமடைந்ததும் ஆஸ்பத்திரியில் லதா சிகிச்சையில் இருந்தால், கடன்காரர்கள் அவரை தொல்லைப்படுத்த மாட்டார்கள். எனவே கொஞ்ச காலம் லதா தொந்தரவின்றி இருக்கலாம் என நினைத்துள்ளார். மேலும் தன்னுடைய திட்டத்தை லதாவிடமும் அவர் கூறியுள்ளார்.
பின்னர் ஜெஸ்டின் கிருபைதாஸ் தனக்கு பழக்கமான ஜெஸ்டின் ராபின் மற்றும் ஷாஜின், அர்ஜூன் குமார் ஆகியோரிடம் எடுத்துக்கூறி லதா மீது திராவகம் வீச ஏற்பாடு செய்ததும் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். திராவகம் வீச பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள் கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதே சமயத்தில் திராவகம் வீச்சு சம்பவத்தில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கும் லதாவிற்கு தற்போது போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
கடன்காரர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்த பெண், ஆட்களை ஏவி தன் மீதே திராவகம் வீச வைத்த சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.