காருக்கு அடியில் தூங்கிய பெண் சக்கரத்தில் சிக்கி பலி


காருக்கு அடியில் தூங்கிய பெண் சக்கரத்தில் சிக்கி பலி
x

சாலையோரம் படுத்து இருந்த பெண் உருண்டு காருக்கு அடியில் சென்று விட்டார். இதனை கவனிக்காமல் டிரைவர் காரை எடுத்ததால் சக்கரத்தில் சிக்கி பலியானார்.

மண்ணடி,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்தவர் பாண்டியன் என்ற தமிழரசன் (வயது 24). டிரைவரான இவர், சென்னையில் தங்கி கார் ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது காரை சென்னை மண்ணடி லிங்குசெட்டி தெருவில் சாலையோரம் நிறுத்தி இருந்தார்.

பின்னர் நேற்று அதிகாலையில் காரை அங்கிருந்து எடுத்தார். அப்போது காருக்கு அடியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் படுத்து கிடந்தார். இதனை கவனிக்காமல் பாண்டியன் காரை அங்கிருந்து எடுத்து சென்றுவிட்டார். இதில் காருக்கு அடியில் படுத்து இருந்த பெண், காரின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

உருண்டு சென்றார்

இதுபற்றி தகவல் அறிந்துவந்த வடக்கு கடற்கரை போலீசார், பலியான பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த பெண்ணும், ஒரு ஆணும் ஒன்றாக நடைபாதையில் படுத்து தூங்கினர். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்தனர். அதன்பிறகு அந்த பெண் தூக்க கலக்கத்தில் அருகில் பாண்டியன் நிறுத்தி இருந்த காருக்கு அடியில் உருண்டு சென்று விட்டார். இதை கவனிக்காமல் பாண்டியன் காரை எடுத்தபோது, காருக்குள் அடியில் படுத்து இருந்த பெண், கார் சக்கரத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது.

டிரைவரிடம் விசாரணை

பின்னர் இந்த வழக்கு பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையில் போலீசார் பலியான அந்த பெண் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் நள்ளிரவில் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்தவரும் மாயமாகி விட்டார். எனவே அவர் யார்? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இதுபற்றி கார் டிரைவர் பாண்டியனிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story