கொள்ளையனை பிடிக்க முயன்ற பெண்ணுக்கு கத்திக்குத்து

கொள்ளையனை பிடிக்க முயன்ற பெண்ணுக்கு கத்திக்குத்து விழுநு்தது.
துறையூர் சாமிநாதன் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி செல்வி (வயது 57). இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் தம்பதி இருவர் மட்டுமே வீட்டில் இருந்தனர். இரவில் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கி உள்ளனர். இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமி ஒருவர், அலமாரி உள்ளிட்ட பகுதிகளில் ஏதேனும் உள்ளதா? என பார்த்துள்ளார். இதற்கிடையில் திடீரென்று விழித்தெழுந்த செல்வி மர்ம ஆசாமியை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். மேலும் அவனை பிடிக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம ஆசாமி செல்வியின் கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதற்கிடையில் ராஜா விழித்தெழுந்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காயம் அடைந்த செல்வியை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையடிக்க முயன்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.






