வீட்டில் இருந்து தோட்டத்திற்கு சென்ற பெண் அடித்துக் கொலை


வீட்டில் இருந்து தோட்டத்திற்கு சென்ற பெண் அடித்துக் கொலை
x

தோகைமலை அருகே வீட்டில் இருந்து தோட்டத்திற்கு சென்ற பெண்ணை அடித்துக் கொலை செய்த மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கரூர்

வேலைக்கு சென்ற பெண்

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள பில்லூர் ஊராட்சி பெரியவீட்டுக்காரன்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி வசந்தா (வயது 39). இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் முத்துசாமி கொத்தனார் வேலைக்கும், வசந்தா தங்களுக்கு சொந்தமான தோட்டத்துக்கு வேலைக்கும், இவர்களது மகள் பள்ளிக்கும் சென்று விட்டார்.

இந்தநிலையில் மாலை வெகுநேரம் ஆகியும் வசந்தா வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தாவின் கணவர் முத்துசாமி மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

பிணமாக மீட்பு

இந்தநிலையில் வசந்தாவின் செருப்பு மட்டும் தோட்டத்தின் அருகே உள்ள ஒரு கிணற்றின் மேல் பகுதியில் கிடந்துள்ளது. இதைக்கண்ட உறவினர்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சுமார் 2 மணி நேரம் போராடி வசந்தாவை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் புகார்

இந்த சம்பவம் குறித்து வசந்தாவின் கணவர் முத்துசாமி தோகைமலை போலீஸ் நிலையில் புகார் கொடுத்தார். அதில் என மனைவியின் தலையில் காயங்கள் இருப்பதாகவும், இதனால் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி கருமண்டபத்தில் ஒரு தனியார் வங்கி மூலம் 20 பேர் சேர்ந்து குழு அமைத்து ரூ.20 ஆயிரம் கடன் பெற்றுள்ளனர்.

இதில் பெரியவீட்டுக்காரன்பட்டியை சேர்ந்த சரோஜா என்ற ஒரு பெண்ணின் பணத்தை காணவில்லையாம். இதனால் சரோஜா, வசந்தாவின் மீது சந்தேகப்பட்டு பிரச்சினை செய்துள்ளார். இதனால் 7 ஆண்டுகளாக சரோஜாவிற்கும், வசந்தாவிற்கும் முன்விேராதம் இருந்து வந்ததும், சம்பவத்தன்றும் சரோஜா, வசந்தாவிடம் பிரச்சினை செய்து வந்துள்ளதும் தெரியவந்தது.

பெண் கைது

இதையடுத்து வசந்தாவிடம் பிரச்சினை செய்த சரோஜாவை பிடித்து போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், சரோஜா முன்விேராதம் காரணமாக வசந்தாவை களைக்கொத்தி மரக்கட்டையால் அடித்து கொலை செய்து, கிணற்றில் வீசி சென்றதை ஒத்துக் கொண்டார். இதையடுத்து தோகைமலை போலீசார் கொலை வழக்குப்பதிந்து, சரோஜாவை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தோகைமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story