ஆனைமலையில் மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தல்
பொள்ளாச்சியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆனைமலையில் மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினார்கள்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆனைமலையில் மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினார்கள்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. சப்-கலெக்டர் பிரியங்காவின் நேர்முக உதவியாளர் வெங்கடாசலம் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இதில் பொள்ளாச்சி நகர பா.ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
பொள்ளாச்சி மரப்பேட்டை 31-வது வார்டுக்கு உட்பட கழிவு நீர் ஓடை மீது கட்டப்பட்ட பாலம், தன்னாசியப்பன் கோவில் வீதி, முகமது நகர், சுண்ணாம்பு கால்வாய், இட்டேரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வழியாகும். 50 வருடத்திற்கு மேலான இந்த பாலம் பராமரிப்பின்றி பழுதடைந்து கனரக வாகனங்கள் செல்லும்போது இடியும் அபாயத்தில் உள்ளது. எனவே இந்த பகுதியில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுண்ணாம்பு கால்வாய் இட்டேரியில் செயல்படும் நியாயவிலை கடை இப்போது வரை வாடகை கட்டிடத்தில் மட்டுமே இயங்குகிறது.
அடிப்படை வசதிகள் இல்லை
இதனால் அவ்வப்போது ரேஷன் கடையின் இடம் மாற்றப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு அவதி ஏற்படுகிறது. எனவே காலியாக உள்ள நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் புதியதாக நியாயவிலைக்கடை அமைத்து தர வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. அதை சரி செய்து தர வேண்டும். சுண்ணாம்பு கால்வாய், தன்னாசியப்பன் கோவில் வீதி, முகமது நகர், மர பேட்டை கிழக்கு பள்ளம் ஆகிய வீதிகளில் கடந்த 11 ஆண்டுகளாக உப்பு தண்ணீர் குழாய்கள் இருந்தும் தண்ணீர் வரவில்லை. மேலும் பாதாள சாக்கடைப் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. மேலும் கழிப்பிட வசதிகளும் இல்லை. எனவே மரப்பேட்டை பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
மகளிர் போலீஸ் நிலையம் வேண்டும்
இதேபோல் ஆனைமலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ஆனைமலை தாலுகாவில் மகளிர் மற்றும் முதியோர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தையே அணுக வேண்டியுள்ளது.
இதனால் நீண்ட நேர பயணமும், அலைச்சலும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க ஆனைமலையில் மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.