தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி ஆஸ்பத்திரியில் திடீர் சாவு
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி ஆஸ்பத்திரியில் திடீரென இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை முயற்சி
சேலம் அம்மாபேட்டை பெரிய கிணற்று தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). இவருடைய மனைவி யசோதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 13 ஆண்டுகளாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்பிரமணி சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர், தனது மற்றும் பிரிந்து சென்ற மனைவியின் பெயர்களில் உள்ள 900 சதுரஅடி நிலத்தை பிரித்து கொடுக்க வேண்டும் என்று கூறி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கினர். மேலும் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திடீர் சாவு
ஆஸ்பத்திரியில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சுப்பிரமணி திடீரென இறந்தார்.
இதுகுறித்து சேலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சுப்பிரமணி இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததும், இதற்காக அரசு ஆஸ்பத்திரியில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சுப்பிரமணியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.