தக்கலை அருகே உரக்கிடங்கு எந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கை துண்டானது


தக்கலை அருகே உரக்கிடங்கு எந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கை துண்டானது
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே மருந்துக்கோட்டையில் உரக்கிடங்கு எந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கை துண்டானது.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே மருந்துக்கோட்டையில் உரக்கிடங்கு எந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கை துண்டானது.

உரக்கிடங்கு

தக்கலை அருகே உள்ள மருந்துக்கோட்டையில் பத்மநாபபுரம் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு உள்ளது. இங்கு கடந்த 10 ஆண்டுகளாக நகராட்சி பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகள் மலைபோல் தேங்கி கிடந்தது. இதனை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக டெண்டர் விடப்பட்டு தனியார் நிறுவனம் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இந்த பணியில் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் அங்குள்ள எந்திரத்தில் குப்பைகளை போட்டு தரம் பிரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

கை துண்டானது

அப்போது கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சென்னப்பன் (வயது50) என்பரது கை எதிர்பாராதவிதமாக எந்திரத்திரத்தில் சிக்கியது. இதை கண்டு அதிர்சியடைந்த சக தொழிலாளர்கள் ஓடி வந்து எந்திரத்தை நிறுத்தினர். அதற்குள் கை துண்டாகி எந்திரத்தில் மாட்டி கொண்டது. இதையடுத்து கை துண்டான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சென்னப்பனை சக தொழிலாளர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் எந்திரத்திரத்தில் சிக்கி இருந்த கையை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ¾ மணிநேரம் போராடி எந்திரத்தில் சிக்கியிருந்த கையை மீட்டனர். பின்னர் அந்த கைைய தொழிலாளியின் உடலோடு ஒட்ட வைக்க ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இந்த நிலையில் சென்னப்பன் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் இருந்து மேல்சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு துண்டான கையை ஒட்ட வைக்க தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story