காயமடைந்த புள்ளிமான் மரக்கடைக்குள் புகுந்தது
நாகமலைபுதுக்கோட்டை அருகே காயமடைந்த புள்ளிமான் மரக்கடைக்குள் புகுந்தது.
நாகமலைபுதுக்கோட்டை,
மதுரை அருகே நாகமலைபுதுக்கோட்டையில் இருந்து விக்கிரமங்கலம் வரை சுமார் 17 கி.மீ. தூரத்திற்கு நாகமலை பரந்து விரிந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான இந்த மலையில் புள்ளிமான்கள், நரி, காட்டு பன்றிகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்கின்றன. அவ்வப்போது இவை உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறி பன்னியான், நாகமலைபுரம், விக்கிரமங்கலம் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே உள்ள ராஜம்பாடி பகுதியில் புள்ளிமான் ஒன்று கால்களில் அடிபட்ட நிலையில் காணப்பட்டது. பொதுமக்களைப் பார்த்து மிரண்டு போன புள்ளிமான் அங்கிருந்த மரக்கடையில் தஞ்சம் புகுந்தது.
இதுகுறித்து கடை உரிமையாளர் உடனடியாக நாகமலைபுதுக்கோட்டை போலீசாருக்கும் திருப்பரங்குன்றம் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தார். நாகமலைபுதுக்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் புள்ளிமானை பத்திரமாக மீட்டு அதற்கு சிகிச்சை அளித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.