நிதி ஒதுக்கி ஒரு வருடமாகியும் பாதியில் நிற்கும் பணிகள்


நிதி ஒதுக்கி ஒரு வருடமாகியும் பாதியில் நிற்கும் பணிகள்
x

பள்ளிகொண்டா பேரூராட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு ஒரு வருடமாகியும் பணிகள் பாதியில் நிற்பதால், ஒப்பந்ததாரரை மாற்றக்கோரி பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

வேலூர்

பேரூராட்சி கூட்டம்

பள்ளிகொண்டா பேரூராட்சி கூட்டம் நேற்று மாலை பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் வசிம்அக்ரம், செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தனர். அலுவலக இளநிலை உதவியாளர் சதீஷ் தீர்மானங்களை வாசித்தார். கவுன்சிலர்கள் குறித்த நேரத்திற்கு வராததால் சுமார் 2 மணி நேரம் தாமதமாக கூட்டம் நடந்தது.

கூட்டம் தொடங்கியதும் 9-வது வார்டு கவுன்சிலரின் கணவர் மற்றும் பள்ளிகொண்டா நகர காங்கிரஸ் தலைவரின் மகன் இறந்ததற்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாதியில் நிற்கும் பணிகள்

அதைத்தொடர்ந்து கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது. கவுன்சிலர்கள் அனைவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியே 50 லட்சம் நிதியில் வார்டுகளில் செயல்படுத்தப்பட்ட பணிகள் இன்னும் முடிக்காமலேயே உள்ளது. ஒரு சில வார்டுகளில் பணி தொடங்காமலே உள்ளது. இதனால் பொதுமக்கள் அந்தந்த வார்டு கவுன்சிலர்களை முற்றுகையிட்டு பணிகளை துரிதமாக செயல்படுத்த கோரிக்கை வைக்கின்றனர்.

பாதி வேலைகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. மீதி பாதி வேலைகள் தொடங்காமலே உள்ளது ஆகவே இந்த ஒப்பததாரரை நீக்கிவிட்டு புதிய ஒப்பந்ததாரரை நியமித்து வளர்ச்சிப் பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என அனைத்து கவுன்சிலர்களும் வலியுறுத்தினர்.

மாற்ற வேண்டும்

ரூ.1 கோடியே 42 லட்சத்து 90 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. உடனே அனைத்து மன்ற உறுப்பினர்களும் பழைய ஒப்பந்ததாரருக்கு இதை கொடுத்தால் நாங்கள் கூட்டத்தை புறக்கணிப்போம், புதிய ஒப்பந்ததாரருக்கு இந்த டெண்டரை விட்டு விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

16-வது வார்டு துளசி நகரில் கழிவுநீர் கால்வாய் சீராக கட்டப்படாததால் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் பாதித்து வருகின்றனர். மேலும் தரம் இல்லாமல் கால்வாய் கட்டப்பட்டுள்ளதாக கவுன்சிலர் குற்றம் சாட்டினார். நிறைவாக அலுவலக கணினி பொறியாளர் சந்தோஷம் நன்றி கூறினார்.

பேரூராட்சியில் முதல் அரையாண்டிற்கான சொத்து வரிகளை 30-ந் தேதிக்குள் கட்டினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


Next Story