நன்னடத்தை விதியை மீறி ஆள்கடத்தலில் ஈடுபட்ட வாலிபருக்கு ஓராண்டு சிறை
வேடசந்தூரில் நன்னடத்தை விதியை மீறி ஆள்கடத்தலில் ஈடுபட்ட வாலிபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வேடசந்தூர் எஸ்.ஏ.பி. நகரை சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 22). பட்டதாரியான இவரை, கடந்த 22-ந்தேதி ஒரு கும்பல் கடத்தி சென்று ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை பறித்தது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேடசந்தூர் சாலை தெருவை சேர்ந்தவர் சுல்தான் (22) உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பெண் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சுல்தான் மீது, வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து அவர், குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் அவரை பிடித்து தாசில்தார் சக்திவேலனிடம் கடந்த 6-ந்தேதி போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, இனிமேல் நான் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபட மாட்டேன் என்று சுல்தான் உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார். இருப்பினும் அப்பாசை கடத்தி பணம் பறித்த வழக்கில் சுல்தான் ஈடுபட்டுள்ளார்.
நன்னடத்தை விதியை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட சுல்தானை, ஓராண்டு சிறையில் அடைக்க தாசில்தார் சக்திவேலன் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து வேடசந்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுல்தானை, நன்னடத்தை குற்றத்துக்காக கைது செய்து திண்டுக்கல் மாவட்ட சிறையில் வேடசந்தூர் போலீசார் அடைத்தனர்.